241. அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயில்
இறைவன் வடாரண்யேஸ்வரர்
இறைவி வண்டார்குழலம்மை
தீர்த்தம் முக்தி தீர்த்தம்
தல விருட்சம் பலா மரம், ஆல மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருவாலங்காடு, தமிழ்நாடு
வழிகாட்டி திருவள்ளூரில் இருந்து நேரடி பேருந்து வசதி உண்டு. சுமார் 20 கி.மீ. தொலைவு. அரக்கோணத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tiruvalangadu Gopuramநடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளில் இத்தலம் இரத்தின சபை. ஆல மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் இத்தலம் 'திருவாலங்காடு' என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் 'வடாரண்யேஸ்வரர்', 'ஆலங்காட்டு அப்பர்', 'தேவர்சிங்கப் பெருமான்' என்னும் திருநாமங்களுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'வண்டார்குழலம்மை', 'பிரம்மரளகாம்பாள்' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

Tiruvalangadu Utsavarபிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நடராஜர், பைரவர், நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர்.

அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் காளி பீடத் தலமாக விளங்குகிறது. இந்த வடாரண்யத்தில் வசித்த சும்பன், நிசும்பன் என்னும் இரண்டு அசுரர்களை அழிக்க பார்வதி தேவி, காளியை அனுப்பினாள். அவளும் அவர்களை அழித்தார். ஆனாலும் அவளது உக்கிரம் குறையாததால், அதை அடக்க சிவபெருமான் இங்கு வந்து நடனமாடி காளியை சாந்தப்படுத்தினார். உன்னை வழிபட்ட பின்னரே என்னை வழிபட வேண்டும் என்றும் அருளினார். காளியும் தனி சன்னதியில் இங்கு அருள்பாலிக்கின்றாள். சிவபெருமான் காளியுடன் ஆடிய தாண்டவம் 'ஊர்த்துவ தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது.

Tiruvalangadu Karaikal Ammaiyar Tiruvalangadu Natarajarஇறைவனையும், இறைவியையும் நேரில் தரிசிக்க காரைக்கால் அம்மையார் கயிலாயத்தை அடைந்தபோது, 'அவருக்கு என்ன வரம் வேண்டும்' என்று இறைவன் கேட்க, 'உன் நடனத்தை எப்போதும் அருகில் இருந்து காண வேண்டும்' என்று வேண்டினார். திருவாலங்காட்டில் எமது நடனத்தைக் காணலாம் என்று இறைவன் காரைக்கால் அம்மையாருக்கு நடனக் கோலத்தைக் காட்டியருளிய தலம். காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

இக்கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பழையனூர் என்னும் தலம் உள்ளது. அங்கு தான் பழையனூர் நீலி கோயிலும், சிவன் கோயிலும் உள்ளது. திருவாலங்காடு செல்பவர்கள் அங்கும் சென்று வரலாம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com